"அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்தனர்" - சட்டப்பேரவையில் எடப்பாடி பெருமிதம்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைநகர் சென்னை பெண்கள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய முதன்மையான மாநகரமாகத் திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக காவல்துறை பல்வேறு தேசிய அளவிலான விருதுகளைப் பெறுவதற்கு முந்தைய அரசின் முறையான ஆதரவும் காவல்துறையின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியும் முக்கியக் காரணமாக அமைந்தன என்றார்.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர் தங்கள் சொந்த உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் சேவை ஆற்றினர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.