14 ஆண்டுகளாக சிறையில் பூத்த காதல்... கொலைக் குற்றவாளியைக் கரம்பிடித்த பெண் போலீஸ்!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் உதவி ஜெயிலராகப் பணியாற்றி வந்த ஃபிரோசா கட்டூன் என்பவருக்கும், அதே சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த தர்மேந்திர சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. சிறை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியின்போது தர்மேந்திர சிங் உதவி செய்ததால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுமார் 14 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் தர்மேந்திர சிங் விடுதலையான பின்னரும் இவர்களது காதல் நீடித்தது.
மதங்களைக் கடந்த இவர்களது காதலுக்குப் பெண் போலீசின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த மே 5 ஆம் தேதி சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி இவர்கள் இருவரும் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணின் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளாத நிலையில், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முன்நின்று கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
சிறைச்சாலை மற்றும் மதத் தடைகளை உடைத்து நடைபெற்ற இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு ஜெயில் அதிகாரியே முன்னாள் கைதியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் அமைந்த இவர்களது இந்தத் துணிச்சலான காதல் கதை குறித்துப் பலரும் வியப்புடன் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தம்பதியினருக்குச் சக சிறைப் பணியாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.