மகளிர் கல்லூரி விழாவில் பரபரப்பு... 'விசில்' ஊதி ஆடிய மாணவிகள் - மேடையேறி பறித்த அதிகாரிகள்!

 

கோவையில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், மாணவிகள் கழுத்தில் அணிந்திருந்த விசில், ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை நினைவூட்டுவதாகக் கூறி அதிகாரிகள் மேடையேறிச் சென்று, விசிலை அதிரடியாகப் பறித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்று, விழிப்புணர்வுப் பாடல்களுக்குக் கோலாட்டம் ஆடினர். நடனத்தின் ஒரு பகுதியாக, மாணவிகள் அனைவரும் கழுத்தில் விசில் அணிந்து, அதனை ஊதியபடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மாணவிகள் கழுத்தில் அணிந்திருந்த விசில், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தின்' தேர்தல் சின்னத்தை ஒத்திருப்பதாக அதிகாரிகள் கருதினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசு விழாவில் ஒரு கட்சியின் சின்னத்தைப் பிரதிபலிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது விதிமீறல் எனக் கூறி, மாணவிகள் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மேடையிலேயே அதிகாரிகள் விசில்களைப் பறித்தனர்.

மாணவிகள் நடனத்தின் பாதியில் இருந்த போதே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது. இருப்பினும், விசில்கள் அகற்றப்பட்ட பின்னர் நடனம் தொடர்ந்து நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சின்னம் 'விசில்' என்பதால், அதிகாரிகள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிகிறது. அரசு விழாக்களில் எவ்வித மறைமுக அரசியல் அடையாளமும் இருக்கக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.