விரைவில் மகளிர் டி.என்.பி.எல். தொடர் - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரைத் தொடர்ந்து, மகளிருக்கான பிரத்யேக டி.என்.பி.எல். தொடரைத் தொடங்குவது குறித்துத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது.
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் திறமையான மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அதிகளவில் உள்ளதால், அவர்களுக்குப் பெரிய அளவிலான போட்டி வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மகளிர் டி.என்.பி.எல். தொடரைத் தொடங்குவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
மகளிர் டி.என்.பி.எல். தொடரின் முதற்கட்டமாக, விரைவில் மகளிர்க்கான சிறப்புக் காட்சிப் போட்டி ஒன்றை நடத்தத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தக் காட்சிப் போட்டிக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டே, மகளிர் டி.என்.பி.எல். தொடரை அதிகாரப்பூர்வமாக நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மகளிருக்கான டி.என்.பி.எல். தொடர் தொடங்கப்பட்டால், அது தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இளம் வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, மகளிர் பிரீமியர் லீக் மற்றும் இந்திய தேசிய அணிக்குத் தேர்வாகப் பெரிய வாய்ப்பாக அமையும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.