உலகப் போர் பதற்றம்.. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
சர்வதேச அளவில் மிக முக்கிய எரிசக்தி போக்குவரத்து பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில், அங்குச் சென்ற வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் திடீரென ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஈரான் ஏவிய 4 அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்க ராணுவப் படைகள் நடுவானில் வெற்றிகரமாக வழிமறித்துச் சுட்டுத் தள்ளியுள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாகவே கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களில் பெரும்பகுதி கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டு அனல் பறக்கும் பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் தனது கடலோரப் பகுதிகளில் இருந்து திடீரென ஏவுகணைகளையும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களையும் ஏவி அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது.
சர்வதேச கடல்சார் வணிகப் போக்குவரத்தை முடக்கும் நோக்கிலும், அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் ஈரான் இந்த விபரீத தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் ஏவுகணைகளை வீசிய அடுத்த சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ராணுவத்தினர் தங்களது அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மூலம் எதிர்த்தாக்குதலைத் தொடங்கினர்.
ஈரான் தரப்பில் இருந்து வர்த்தகக் கப்பல்களை நோக்கி அச்சுறுத்தலாக வந்த 4 முக்கியத் தாக்குதல் ஏவுகணைகளை அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் துல்லியமாக வழிமறித்து, நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அழித்தன. அமெரிக்காவின் இந்த மின்னல் வேகச் செயல்பாட்டால் மிகப்பெரிய கப்பல் விபத்துகளும், உயிர்ச்சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் ஈரானின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோருக் மற்றும் குவேஷ்ம் தீவுகளில் உள்ள ஈரானிய ராணுவத்தின் கடலோரக் கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அதிரடியாகப் பதிலடித் தாக்குதல் நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்துள்ளன.
தற்போது ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடாப் பகுதி முழுவதும் அமெரிக்கக் கடற்படையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பன்னாட்டு வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் அதிநவீனக் கப்பல்கள் அந்தப் கடல் பகுதியில் 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.