உலக யோகாசன சாம்பியன்ஷிப் 2026... 100-க்கும் மேற்பட்ட தங்கம் வென்று இந்தியா சாதனை!

 

முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஏகா அரேனாவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஐந்து நாள் சர்வதேசப் போட்டியில், ஆரம்பம் முதலே தனது அபார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த இந்திய அணி, இறுதி நாளான திங்கட்கிழமை 100-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்து ஒட்டுமொத்தப் பட்டியலிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. யோகாசன விளையாட்டில் உலக அளவில் இந்தியாவின் நிலையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அசாத்திய வெற்றி அமைந்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 102 தங்கம் உட்பட ஒட்டுமொத்தமாக 114 பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் அசைக்க முடியாத முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பான் அணி 3 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அர்ஜென்டினா நாட்டின் ஒரே வீராங்கனையான நபிலா பர்ராசா 2 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று தனது நாட்டிற்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். அண்டை நாடான நேபாளம் 1 தங்கம், 36 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

இந்த முதல் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் 79 நாடுகளில் இருந்து 522 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் 122 பேர் கொண்ட வலுவான குழு களம் இறங்கியது. யோகாசன விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு சென்று, எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும் இலக்கோடு மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.