சூட்கேஸ் இழுத்தால் அபராதம்... சுற்றுலாப் பயணிகளுக்கு உலக நாடுகள் விசித்திரத் தடைகள்!
உலகில் சுற்றுலாத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிரம்மாண்ட வளர்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், சில நாடுகள் தங்களின் அமைதியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கப் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதிகப்படியான வெளிநாட்டவர்களின் வருகையால் உள்ளூர் மக்கள் திணறி வரும் சூழலில், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் விசித்திரமான குற்றங்களைத் தடுக்கவும் பல அதிரடி சட்டங்கள் அங்கு அமலுக்கு வந்துள்ளன. இது தெரியாமல் குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் தற்போது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற பாலி தீவில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வசித்து வருவதால், அங்கு வேலைவாய்ப்புப் போட்டிகள் மற்றும் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. இதனால் பாலியின் சில பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகள் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் விபத்துகளைக் குறைக்கவும் வெளிநாட்டுப் பயணிகள் பைக் வாடகைக்கு எடுப்பதற்கும் தடை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் புகழ்பெற்ற பகுதிகளில் கஞ்சா புகைக்கத் தடை விதிக்கப்பட்டதோடு, அங்கு தங்கும் பயணிகளுக்கு 12.5% புதிய சுற்றுலா வரியும் விதிக்கப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலாகக் குரோஷியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க டுப்ரோவ்னிக் நகரில், பழமையான கற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் சுற்றுலாப் பயணிகள் சக்கரம் வைத்த டிராலி சூட்கேஸ்களை இழுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் உருளும் சத்தம் உள்ளூர்வாசிகளின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பயணிகள் தங்களின் லக்கேஜ்களை நகருக்கு வெளியே உள்ள லாக்கர்களில் மட்டுமே வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரிலும், நள்ளிரவு நேர மதுவிடுதிச் சுற்றுலாக்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் அதிரடித் தடை விதித்துள்ளனர்.