கல்பாக்கம் IGCAR-ல் உலகின் முதல் அணுக்கரு ஹைட்ரஜன் ஆலை திறப்பு - தூய்மையான எரிசக்திப் புரட்சி!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், அணு உலை வெப்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை இந்திய அணுசக்தி துறை அண்மையில் முறைப்படி தொடங்கியுள்ளது.
வழக்கமாகத் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க அதிகப்படியான மின்சாரத்தைப் பயன்படுத்தி 'மின்னாற்பகுப்பு' முறை கையாளப்படும். ஆனால், இந்த ஆலையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு முன்னோடித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல்பாக்கத்தில் உள்ள 'வேக ஈனுலை சோதனை அணு உலை' மூலம் உருவாக்கப்படும் மிக அதிகப்படியான வெப்பம் இந்த ஆலைக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்நாட்டிலேயே உருவாக்கிய 'தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் சுழற்சி' என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்த அணு உலை வெப்பத்தைக் கொண்டு நீரானது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிக்கப்படுகிறது.
உலகளவில் பல்வேறு நாடுகள் அணுசக்தி மூலம் ஹைட்ரஜன் தயாரிக்க முயன்று வரும் வேளையில், இந்தத் தாமிரம்-குளோரின் சுழற்சி முறையை அணு உலையுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முதல் உலகளாவிய முன்னோடித் திட்டம் இந்தியாவுடையதே ஆகும்.
மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தாமிரம்-குளோரின் சுழற்சி முறை மிகக் குறைந்த வெப்பநிலையிலேயே அதிக ஆற்றல் திறனுடன் செயல்படக்கூடியது.
புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருக்காமல், அணுசக்தி மூலம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக, எவ்வித பசுமைக்குடில் வாயுக்களும் உமிழப்படாமல் முற்றிலும் தூய்மையான 'கிரீன் ஹைட்ரஜன்' இதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை முறைப்படி திறந்து வைத்துப் பேசிய அணுசக்தி துறையின் செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் அஜித் குமார், "அணுசக்தி என்பது வெறும் மின்சார உற்பத்திக்கானது மட்டுமல்ல, அது தூய்மையான எதிர்காலத்திற்கான வெப்ப ஆற்றலையும் வழங்க வல்லது என்பதை இந்த ஆலை நிரூபித்துள்ளது" எனப் பெருமிதம் தெரிவித்தார்.
கல்பாக்கம் இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை முன்னிலையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்ப செயல்விளக்க ஆலை , அடுத்தகட்டமாக இந்தியாவில் வணிக ரீதியில் அணுக்கரு ஹைட்ரஜன் ஆலைகளை அமைப்பதற்கும், இந்தியாவின் 'நெட்-ஜீரோ' கார்பன் உமிழ்வு இலக்கை 2070-க்குள் எட்டவும் மிக முக்கிய அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை.