வுஷூ போட்டியில் அசத்திய இரட்டையர்கள் விளையாட்டுப் பிரிவில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பு!

 

சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சேலத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதர-சகோதரி, விளையாட்டுப் பிரிவிற்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றுப் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா ஆகிய இருவரும் சிறுவயது முதலே ஒரே வகுப்பறையில், ஒரே பாடப்பிரிவில் படித்து விளையாட்டுத் துறையிலும் ஒன்றாகச் சாதனை படைத்து வருகின்றனர். சர்வதேச அளவிலான வுஷூ போட்டிகளில் இந்தியப் சார்பில் பங்கேற்றுப் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

விளையாட்டில் இவர்கள் செய்த சாதனையைப் பாராட்டும் வகையில், விளையாட்டுப் பிரிவிற்கான எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் பணியாற்றி வருவதால், அவா்களைப் போலவே தாங்களும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குச் சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளதாக இந்த இரட்டையர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.