நூல் கொள்முதல் முறைகேடு... 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

 

தமிழகத்தில் பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, துறை ரீதியான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்து கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் கூறி பொது நூலக இயக்குநரகத்திற்குப் புகார்கள் சென்றன.

புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட 5 அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பட்டியலில் காமாட்சி, தினேஷ் குமார், சந்தானகிருஷ்ணன், எஸ். சந்தான கார்த்திகேயன் மற்றும் ஜே. ஜூலியட் ஆகிய ஐந்து அதிகாரிகள் அடங்குவர்.

பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இவர்களிடம் துறை ரீதியான தீவிர விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாகவும், விசாரணையின் முடிவில் மேலும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.