சார்தாம் யாத்திரையில் சோகம்... 49 நாட்களில் 165 பக்தர்கள் மாரடைப்பால் மரணம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இந்துக்களின் புனிதத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய ஆலயங்களை தரிசிப்பதற்கான சார்தாம் யாத்திரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்பொழுது அந்த மலைப் பாதைகளில் எங்குப் பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 49 நாட்களில் மட்டும் இந்த யாத்திரையில் பங்கேற்ற 165 பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகளில் நிலவும் கடுமையான குளிர், குறைந்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் கரடுமுரடான மலைப் பாதைகளில் நடப்பதால் ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாகப் பெரும்பாலான பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டுப் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மிகவும் உயரமான பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் வழித்தடத்தில் மட்டுமே அதிகபட்சமாக 80 பக்தர்கள் பலியாகியுள்ளனர். அதேபோல் பத்ரிநாத் பாதையில் 48 பேரும், யமுனோத்ரி மலைப்பாதையில் 21 பேரும், கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த மரணங்களைத் தடுக்கவும், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ள பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் மலைப் பாதைகளில் கூடுதல் மருத்துவ முகாம்களையும், அவசரக்கால ஆம்புலன்ஸ் வசதிகளையும் உத்தரகாண்ட் அரசு தற்பொழுது போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தி வருகிறது.