“புதருக்குள்ள லைட்டா போட முடியும்”... எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியீடு!

 

தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தனது சர்ச்சை பேச்சுக்காக நடிகர் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உயிரிழந்த மாணவி மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அவரது கருத்துகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மன்னிப்பைக் கோரியுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.வி.சேகர், செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்துக் கருத்து தெரிவித்தார். அப்போது, "பெற்றோர்கள் பெண் குழந்தைகளைத் தனியாக அனுப்பக் கூடாது, புதருக்குப் பின்னால் ஏன் செல்ல வேண்டும்?" என்பது போன்ற அவரது கேள்விகள், பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுவது போல் இருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டினர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த எஸ்.வி.சேகர், தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள மன்னிப்புப் பதிவில் , "யாரையும், குறிப்பாக இறந்து போனவர்களைப் பற்றித் தவறாகப் பேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பொதுவாகப் பெண்களுக்குப் பெற்றோர் அதிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். இதனால் மனவருத்தம் அடைந்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்."

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த இந்த விவாதம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியது. எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்ட அறிவிப்புகள் கைவிடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.