"அன்புமணியைத் தலைவரா ஏத்துக்க முடியாது; என் உயிரைப் பணயம் வைத்தேன்!" – பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள்!
பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அருள், அக்கட்சியின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதுடன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த பரபரப்பு தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
சேலத்தில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ அருள் தனது தீவிர ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமகவின் தற்போதைய தலைமை மீதுள்ள தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
"அன்புமணிக்காகப் பலமுறை என் உயிரையே பணயம் வைத்து உழைத்திருக்கிறேன். ஆனால், இனிவரும் காலங்களில் அன்புமணி ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது அடுத்தகட்ட அரசியல் பாதை என்ன என்பதை எனது ஆதரவாளர்களுடன் விரிவாக ஆலோசித்து மிக விரைவில் இறுதி முடிவை அறிவிப்பேன்" என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் தற்போதைய தலைமை மீது அதிருப்தி இருந்தாலும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது தனக்குள்ள எல்லையற்ற மரியாதையை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். "எனக்கு எப்போதும் மருத்துவர் அய்யா ராமதாஸ் தான் கடவுள். அவர் என் மீது காட்டிய அன்பையும் நம்பிக்கையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. தேர்தலில் போட்டியிட எனக்குத் தொடர்ந்து 6 முறை வாய்ப்புகளை வழங்கி, 7-வது முறையில் என்னைச் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கிய பெருமை அவரையே சாரும்" எனக் குறிப்பிட்டார்.
பாமகவில் எழுந்துள்ள இந்த அதிருப்தி அலையைத் தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ அருளைத் தங்களது கட்சியில் இணைத்துக் கொள்ளத் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமக்கு திமுக, அதிமுக மற்றும் தவாக ஆகிய முக்கியக் கட்சிகளிலிருந்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அழைப்புகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலப் பாமகவின் முக்கிய முகங்களில் ஒருவராகக் கருதப்படும் அருள், அன்புமணியை எதிர்க்கத் துணிந்து கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.