“இனி உனக்குப் பாவமும் இல்லை, பழியும் இல்லை!” - எமதர்மனுக்கு விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியம் ஈசன்!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோவிலில், எமதர்மராஜனே சிவனருளால் மரண பயம் நீங்கி, 'க்ஷேத்திர பாலகனாக' வீற்றிருக்கும் நெஞ்சை நெகிழ்விக்கும் ஆன்மிக வரலாறு குறித்து தெரிஞ்சுக்கோங்க.
உயிர்களைப் பறிக்கும் தொழிலைச் செய்வதால் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து எமதர்மனுக்கு இறைவன் விமோசனம் அளித்த தலம் தான் ஸ்ரீவாஞ்சியம். இத்தலத்தில் எமதர்மன் யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மக்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களின் உயிரை எடுக்கும் பணியைச் செய்யும் எமதர்மனுக்கு ஒரு தீராத கவலை இருந்தது. "எத்தனையோ புண்ணியப் பதவிகள் இருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களைப் பறிக்கும் இந்தப் பதவி? மக்கள் அனைவரும் தன்னைத் திட்டித் தீர்க்கிறார்களே" என்று வருந்தினார். இந்த 'பிரம்மஹத்தி' தோஷத்தாலும், பாவங்களாலும் அவருக்கு மன நிம்மதியே இல்லாமல் போனது.
தனது குறையைத் தீர்க்க திருவாரூர் தியாகராஜரை வேண்டினார் எமதர்மன். அப்போது அசரீரி ஒலித்தபடி அவர் ஸ்ரீவாஞ்சியம் வந்து கடும் தவம் புரிந்தார். மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று காட்சி தந்த சிவபெருமானிடம், தனது தொழிலால் வரும் பழியை நீக்க வேண்டினார் எமதர்மன்.
ஈசன் அவருக்கு அளித்த அபய வரங்கள்:
-
பழி நீக்கம்: "எமதர்மனே! இனிமேல் யாரும் 'எமன் உயிரைப் பறித்துவிட்டான்' என்று சொல்ல மாட்டார்கள். நோய் வந்ததாலோ, வயதானதாலோ அல்லது விபத்தாலோ இறந்தார்கள் என்றே கூறுவார்கள். இதனால் உனக்குப் பழியும் கிடையாது, பாவமும் கிடையாது."
-
முதல் மரியாதை: "இந்தத் தலத்திற்கு வருபவர்கள் முதலில் உன்னைத் தரிசித்த பின்னரே, என்னைத் (வாஞ்சிநாதசுவாமி) தரிசிக்க வேண்டும். நீயே இத்தலத்தின் க்ஷேத்திர பாலகன்."
-
மறுபிறப்பற்ற நிலை: "புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு வர முடியும். இங்கு வந்து உன்னைத் தரிசிப்பவர்களுக்கு அமைதியான இறுதிக்காலத்தையும், மறுபிறப்பற்ற முக்தி நிலையையும் வழங்குவேன்."
ஒரே சன்னதியில் எமனும் சித்ரகுப்தனும்:
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவிலின் அக்னி மூலையில், தெற்கு நோக்கி எமதர்மனும் அவரது கணக்காளர் சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்கு எமதர்மன் யோக நிலையில் இருப்பதால், இவரைத் தரிசிப்பவர்களுக்கு மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பக்தர்களின் வழிபாட்டு முறைகள்:
-
வடை மாலை: எமதர்மனுக்கு வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
-
ஆயுள் ஹோமம்: நீண்ட ஆயுள் பெறவும், நோயற்ற வாழ்வு வாழவும் இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி (60-ஆம் கல்யாணம்) போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.
காசிக்கு வீசம் (சிறிது) அதிகம் என்று போற்றப்படும் இந்த ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் எமதர்மனைத் தரிசிப்பது தீராத நோய்களையும், மனக்கவலைகளையும் நீக்கும் அருமருந்தாகும்.