“நீங்க கோட்டு போடுங்க.. யாரு கவலைப்பட்டா?”... அதிமுக பதிலடி!
தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, பொறுப்பற்ற தனத்தின் உச்சம் என்றும், தங்களது தோல்விகளை மறைக்க ‘கத்தி’ பட பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய முதலமைச்சரின் உரையை குறிப்பிட வேண்டும் என்றால், அது ஒரு 'நார்சிசிஸ்ட்' பேச்சு என்றுதான் சொல்ல வேண்டும். தான் அமர்ந்திருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமலும், தன் ஆட்சியில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமலும் அவர் பேசியுள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் மட்டும் போதுமா, நிர்வாகம் தானாக செயல்பட்டுவிடுமா? என்ன ஒரு புது உருட்டு இது!
மாநிலத்தில் இத்தனை குற்றங்கள் நடக்கிறது, இத்தனை மரணங்கள் நிகழ்கின்றன, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலையோ, வருத்தமோ முதல்வர் முகத்திலோ பேச்சிலோ தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லாத இத்தன்மை சுயநலப் போக்கின் உச்சம் அல்லவா?
"எல்லாத் தவறுக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்" என்று கூறுவதுதான் புதிய மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி நிலைமை மோசமாக இருந்தது என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தீர்களா? இதில், தான் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூட்டு சதி செய்தார்கள், சூழ்ச்சி செய்தார்கள் எனப் புலம்புகிறார். மேடையில் கத்திப் பேசுவதாலும், ‘கத்தி’ பட டயலாக் மாடுலேஷனில் பேசுவதாலும் பொய்கள் ஒருபோதும் உண்மையாகிவிடாது. தான் பேசுவதற்கு முதல்வர் விஜய் ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நடத்திய குதிரை பேரத்திற்கு, அவர்களே வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே முதல் சாட்சி. இவ்வளவு வாய் கிழியப் பேசும் முதல்வர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? (இது வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சியாகும்).
அதிமுகவை “மற்றும் பலர்” என்று வாயளவில் அலட்சியமாகச் சொல்லும் இவர்கள், அடுத்து அதிமுகவிலிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பது ஏன்? இப்போது போட்டி என்னவோ இரண்டு பேருக்கு நடுவில்தான் நடக்கிறது. மக்கள் ஏமாற்றுவதிலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதிலும் திமுகவை மிஞ்சிவிடும் அளவிற்கு தவெக செயல்பட்டு வருகிறது. எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றிவிட முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
“நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களைச் சுற்றித்தான் இயங்குவது போல சும்மா நசநசவெனப் புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” என்று அதிமுக தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளது.