"பாதுகாப்பான ஆட்சி நடத்துறோம்னு சொல்றீங்க... நடப்பது வேறாக உள்ளது" - தவெக அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்!
"பெண்களின் பாதுகாப்புக்காகத் தான் ஆட்சி நடத்துகிறோம் என முதலமைச்சர் கூறுகிறார்; ஆனால் தரையிறங்கிப் பார்த்தால் நடப்பது வேறாக உள்ளது" என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசை நோக்கிக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கு ஒன்றின் விசாரணை, இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி முன்னிலையில் வந்தது. இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ அறிக்கையை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால், ஒரு முறையான மருத்துவப் படிவத்தில் இல்லாமல், ஏனோதானோ என்று ஒரு சாதாரணத் துண்டுச்சீட்டில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பு தாக்கல் செய்த அந்தத் துண்டுச்சீட்டு அறிக்கையைப் பார்த்த நீதிபதி கடும் அதிருப்தியடைந்ததுடன், நீதிமன்ற வளாகத்திலேயே மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். "பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒட்டுமொத்த உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னால், சம்பந்தமே இல்லாமல் கருக்கலைப்பு குறித்து மட்டும் ஒரு துண்டுச்சீட்டில் அறிக்கை தந்து விளையாடுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
அரசுத் துறைகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டு ஆவேசமடைந்த நீதிபதி, "பெண்களின் பாதுகாப்புக்காக ஆட்சி நடத்துகிறோம் என முதல்வர் கூறுகிறார்; ஆனால் நடப்பது வேறாக உள்ளது" என தவெக அரசை நேரடியாகக் காட்டமாக விமர்சித்தார். மேலும், இந்த விவகாரத்தில் முறையான அறிக்கை தராத திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன், நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
"பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசுக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் இடையே முரண்பாடு நிலவுகிறது" என்ற தொனியில் உயர் நீதிமன்றமே நேரடியாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு நிர்வாக ரீதியிலான நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.