"அந்நியன் மாதிரி பேசிட்டு, அம்பி மாதிரி கையை விரிக்கிறீர்களே?" - விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்!
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் விஜய் தன்னை விமர்சித்துப் பேசிய பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளம் வாயிலாக அவருக்குப் பல கேள்விகளை எழுப்பிப் பதிலடி கொடுத்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மதுராந்தகத்தில் அவர் ஆற்றிய உரையை 'ஷூட்டிங் டயலாக் டெலிவரி' என்று கிண்டலடித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கித் தனது கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு, 'தவெக தூய சக்தி, திமுக தீய சக்தி' என்று விஜய் பேசுவது எந்த வகையிலும் நியாயமில்லை என அவர் சாடியுள்ளார்.
திமுகவும் பாஜகவும் வேறு வேறல்ல என்று விஜய் குற்றஞ்சாட்டி வருவதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஸ்டாலின், கட்சி தொடங்கியதிலிருந்து பாஜகவை எதிர்த்து விஜய் எத்தனை முறை குரல் கொடுத்துள்ளார் அல்லது போராட்டம் நடத்தியுள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவை எதிர்ப்பது போல் நடிப்பது சரணாகதி அரசியல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் நடைமுறைக்குச் சாத்தியமானவை என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு 'கஜானா காலி' என்று கூறி கையை விரிப்பது 'அந்நியன் - அம்பி' கதையைப் போல் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தவெக அரசு கொண்டுவந்தது வெற்றி மின்வெட்டு, வெற்றி அரிவாள் வெட்டு, வெற்றி விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோதத் திட்டங்கள் மட்டுமே என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கு மற்றும் கரூர் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தாமல், முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்துடன் பேசுகிறோமா என்பதை விஜய் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.