இல்லத்தரசிகளே உஷார்... யூடியூப்  லைவில் நகைகளை காட்டிய பெண்...  வீட்டில் புகுந்து கொள்ளையடித்த மர்ம கும்பல்!

 

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் மோகினி கிராமத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். இவர் சமூக வலைதளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட யூடியூப் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் தனது பக்கத்தில், தான் வைத்திருக்கும் தங்க நகைகள், கட்டுக்கட்டான ரொக்கப் பணம் மற்றும் தனது ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை முறையை அடிக்கடி வீடியோவாகப் பதிவிட்டு வந்துள்ளார். ஒரு வீடியோவில் வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரை அனைத்தையும் காட்டியதுடன், மற்றொரு வீடியோவில் மேஜை மீது நகைகளையும் பணத்தையும் அடுக்கி வைத்துப் படம் பிடித்துள்ளார்.

ஆன்லைனில் இவர் காட்டிய இந்த ஆடம்பரம், கொள்ளையர்களுக்கு மிக எளிதாக வாய்ப்பாக மாறிப்போனது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ரச்சனா குர்ஜாரின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டினர். பின்னர் அங்கிருந்த 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதிகாலை 4 மணி அளவில் கண்விழித்த குடும்பத்தினர், அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளையர்கள் தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.