"நடுத்தெருவுக்குத்தான் போவீங்க" - தவெக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இடையே நடுரோட்டில் மோதல்!

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் இருவர் பொதுவெளியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் பகுதியில் கட்சிப் பணிகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தவெக மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆகிய இருவருக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் சாதாரண விவாதமாகத் தொடங்கிய இந்த விவகாரம், அடுத்த சில நிமிடங்களில் ஒருவரையொருவர் ஒருமையில் பேசும் அளவிற்குத் தீவிரமடைந்து, நடுரோட்டில் மோதலாக உருவெடுத்தது.

அப்போது, இரு தரப்பினரும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி மோதிக்கொண்ட நிலையில், ஆத்திரமடைந்த ஒன்றியச் செயலாளர், மாவட்ட இணைச் செயலாளரைப் பார்த்து, "நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க.. நடுத்தெருவிற்குத் தான் போவீங்க!" என்று ஆவேசமாகச் சாபமிட்டார். சுற்றியிருந்த பிற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றும், இரு நிர்வாகிகளும் தொடர்ந்து ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டனர்.

அங்கிருந்தவர்களால் செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த மோதல் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

சமீபகாலமாகத் தவெக உட்கட்சிக்குள் பல்வேறு மாவட்டங்களில் பூசல்கள் நிலவி வருவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது திருச்செந்தூரில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான உயர் நிர்வாகிகள் பொதுவெளியில் சாபமிட்டுக் கொண்டு மோதியுள்ள சம்பவம் கட்சித் தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்ட தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.