“நீங்க... மனுஷனாகவும், கலெக்டராகவும் தோற்றுவிட்டீர்கள்...” லீவு தராததால் கலெக்டர்களுக்கு இன்ஸ்டா மெசேஜ் அனுப்பிய மாணவர்கள் | மழை பரிதாபங்கள்

 

தமிழகத்தில் கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை அளிக்கப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆட்சியர்களுக்கு அனுப்பிய ஜாலியான மெசேஜ்களை கலெக்டர்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் மழை குறைவாக இருந்ததால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த நெல்லை மாவட்ட குறுறும்புக்கார மாணவர்கள் சிலர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குச் சென்று, "மழைக்கு லீவு தராததால் நீங்கள் மனிதனாகவும், ஆட்சியராகவும் தோற்றுவிட்டீர்கள்" என மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

மாணவர்களின் இந்த வெகுளித்தனமான மனநிலையை உணர்ந்து கோபப்படாமல் ரசித்த ஆட்சியர் ஆனந்த் மோகன், மாணவர்கள் தனக்கு அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரெயின் பரிதாபங்கள்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.

இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகனும், மழை விடுமுறை கேட்டுத் தனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பிய மாணவர்களின் ஜாலியான கருத்துகளை 'Rainy Days Paridhabangal' என்ற தலைப்பில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் இணையவாசிகளிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.