சிங்கங்களின் இனச்சேர்க்கையைக் காண அருகில் சென்ற இளைஞர் சிங்கங்கள் தாக்கி உயிரிழப்பு!

 

சிங்கங்கள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த போது, அதனை மிக அருகில் சென்று பார்க்க முயன்ற 21 வயது இளைஞர் ஒருவர், சீற்றமடைந்த சிங்கம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதிக்கப்படாத வனப்பகுதி எல்லைக்குள் 21 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அப்போது அங்கு சிங்கங்கள் ஜோடியாக இனச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளன. பொதுவாகவே விலங்குகள் இத்தகைய காலங்களில் அதிக ஆக்ரோஷத்துடனும், தங்களது எல்லைப் பாதுகாப்பில் மிகக் தீவிரமாகவும் இருக்கும்.

இதை உணராமல், அந்த 3 இளைஞர்களும் தங்களது மொபைல் போன்களில் படம் பிடிப்பதற்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சிங்கங்களின் மிக அருகில் சென்றுள்ளனர். இளைஞர்கள் தங்களுக்கு மிக அருகில் வருவதைக் கண்டதும், ஆத்திரமடைந்த ஆண் சிங்கம் ஒன்று அவர்கள் மீது பாய்ந்து கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்தது.

சிங்கத்தின் இந்தத் திடீர் சீற்றத்தைக் கண்டு திகைத்த இளைஞர்களில், சோஹில் மெமன் என்ற 21 வயது இளைஞரைச் சிங்கம் கவ்விப் பிடித்தது. சிங்கம் அவரது கழுத்து மற்றும் உடற்பகுதியில் பலத்த காயம் ஏற்படுத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

உடன் சென்ற மற்ற இரு இளைஞர்களும் சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பித்து, அலறியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினர். தப்பியோடிய இளைஞர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், தீவிர ஆக்ரோஷத்துடன் இருந்த சிங்கங்களை நீண்ட நேரம் போராடி அடியோடு விரட்டியடித்தனர். அதன் பின்னரே, சிங்கங்களின் பிடியில் இருந்த சோஹில் மெமனின் உடலை அவர்களால் மீட்க முடிந்தது.

வனப்பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகளின் இயற்கை வாழ்வியலுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்றும், குறிப்பாக ஆபத்தான விலங்குகளின் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பது தற்கொலைக்குச் சமம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தற்பொழுது எச்சரித்துள்ளனர்.