தவறான சிகிச்சையால் இளைஞரின் கால் அகற்றம்: தனியார் மருத்துவமனை ரூ.35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தவறான மருத்துவ சிகிச்சையால் 24 வயது இளைஞரின் இடது கால் அகற்றப்பட்ட வழக்கில், தனியார் மருத்துவமனை ரூ.35.68 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தினேஷ்குமார் (24), கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காலில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து உடுமலையில் உள்ள கோகுல் பாலிகிளினிக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் காலில் தொற்று ஏற்பட்டு நிலைமை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், 2023 நவம்பர் 30-ம் தேதி அவரது இடது கால் முட்டிக்குக் கீழே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக தினேஷ்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மருத்துவமனையின் சேவைக் குறைபாடு மற்றும் தவறான சிகிச்சையை உறுதி செய்தது. இதையடுத்து, ரூ.35,68,313 இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது