‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ தொடக்கம்... நாளை கொடி, லோகோ அறிமுக விழா!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் பெயரில், ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் திருநெல்வேலியில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் கொடி அறிமுக விழா நாளை (நவம்பர் 24) காலை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரவையின் அடையாளச் சின்னமான லோகோ மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் விழா நாளை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நற்பணித் திட்டங்கள் மற்றும் சமூக சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு தொடங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
‘இளைய புரட்சித்தலைவி’ என்ற பட்டத்துடன் தொடங்கப்படும் இந்தப் பேரவை மற்றும் நாளை நடைபெறவுள்ள கொடி அறிமுக விழா குறித்து நடிகை த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியாகவில்லை.
இந்நிகழ்வு நடிகை த்ரிஷாவின் முறையான அனுமதி மற்றும் ஒப்புதலுடன் நடைபெறுகிறதா, அல்லது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் தனிப்பட்ட முயற்சியால் முன்னெடுக்கப்படுகிறதா என்பது குறித்த தெளிவான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை த்ரிஷா, எதிர்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பழைய பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் மீண்டும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஏற்கனவே மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்படுவது திரையுலக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.