“உங்களின் அர்ப்பணிப்பு நாட்டிற்கே உத்வேகம்!” - பஞ்சாயத்து ராஜ் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியாவின் அடிமட்ட ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பங்களிப்பைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாட்டின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச்சேவையிலும் தேசிய சேவையிலும் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது."
ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "மக்களின் மகிழ்ச்சியிலும் நலத்திலுமே ஒரு மக்கள் பிரதிநிதியின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது. மக்களுக்கு எது பிடிக்குமோ அதுவே அந்தப் பிரதிநிதிக்கும் பிடிக்கும்," என்று மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் தினமானது “சக்தியான பஞ்சாயத்து, முழுமையான வளர்ச்சி” என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. கிராமப்புறங்களில் டிஜிட்டல் ஆளுமை மற்றும் நீடித்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
1992-ம் ஆண்டு இயற்றப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவே பஞ்சாயத்துகளுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், 2010-ம் ஆண்டு முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், சிறந்த முறையில் செயல்பட்ட பஞ்சாயத்துகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 'பஞ்சாயத்து வளர்ச்சி குறியீடு' (PAI) 2.0 அறிக்கையையும் மத்திய அமைச்சகம் இன்று வெளியிடுகிறது.