"உங்க பையன் தான் உங்க கூட இல்லையே சார்..." - விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மகன் பேச்சு சர்ச்சையானது!

 

தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கைதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையையும் காரசார விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாகக் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், சட்டசபையில் தான் பேசத் தொடங்கினால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வதால் கதவுகளை மூடிவிட வேண்டும் என்று கரூர் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது, "சட்டசபைக் கதவுகள் மூடப்பட்டால் எலும்புகள் உடையும்" என அவர் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இப் பேச்சின் அடிப்படையில் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைது குறித்து அவரது மகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறை விசாரணையின் போது தனது தந்தைக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். "என் தந்தைக்குச் சர்க்கரை நோய் மற்றும் இதயப் பாதிப்பு உள்ளது. அதைக் கூடப் பொருட்படுத்தாமல் 13 மணி நேரம் அடைத்து வைத்து விசாரிக்கின்றனர். துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்கள் சொல்வதையே வாக்குமூலமாகத் தர வேண்டும் என அழுத்தம் தருகிறார்கள்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மூளை தான் உடம்பை இயக்கும். மாநிலத்தின் மூளையான சட்டசபையிலேயே எம்.எல்.ஏ-க்களை அடைக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். உங்க பையன் தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்.. அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம் சார்!" என நேரடியாக முதல்வரைக் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்கண்டேயன் கைதான சம்பவத்திற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த அரசாங்கம் காவல்துறையைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ-வைக் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.