"நீங்க தான தாய் மாமன்.. பதில் சொல்லுங்க!" - முதல்வர் விஜய்யை விளாசிய சீமான்!

 

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் கூறித் தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.

கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் குறித்துக் காவல்துறையினரிடம் அமுதன் புகார் அளித்ததன் காரணமாகவே, அவர் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த உண்மையை மறைத்து மாணவர்களுக்கிடையேயான 'குழு மோதல்' எனக் கூறி வழக்கைத் திசைதிருப்ப அரசு முயல்வதாகச் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

20 மாணவர்கள் சேர்ந்து ஒருவரைக் கொன்றதை 'குழு மோதல்' என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் கூறியிருப்பது முற்றிலும் மோசடித்தனம் என்று அவர் விமர்சித்தார். "பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைத் 'தாய் மாமன்' என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், பலியான 19 வயது மாணவனின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?" எனச் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமுதனின் படுகொலை குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட்டுத் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் த.வெ.க அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.