தேனியில் விவசாயி தோட்டத்தில் பசுமாடு திருடிய வாலிபர் கைது; வாகனம் பறிமுதல்!

 

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த விலையுயர்ந்த பசுமாட்டைத் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ஜி.இராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சதாராம் (43). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருவதுடன், கொட்டகை அமைத்துப் பசுமாடுகளையும் வளர்த்து வருகிறார்.

கடந்த 9-ஆம் தேதி மாலை மாடுகளில் பால் கறந்துவிட்டு கொட்டகையில் கட்டிவிட்டுச் சென்ற அவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கிருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பசுமாடு மட்டும் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து சதாராம் அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் மாட்டைச் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், க.விலக்கு அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் தமிழ்பாரதி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாட்டைத் கடத்தப் பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.