8 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது.. எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் அதிரடி நடவடிக்கை!
கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்தில் விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 8 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த சமீம் அக்தர் (19) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் ரயில்வே துணை கண்காணிப்பாளர் ஜார்ஜ் ஜோசப்பிற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல் நிலைய அதிகாரி ஜி. சுனில் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து இறங்கி 4-ஆம் நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த சமீம் அக்தரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் இரண்டு தனித்தனி உறைகளில் மொத்தம் 8.022 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஊழியராகப் பணிபுரிந்துவரும் சமீம் அக்தர், சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போது கஞ்சா கடத்தல் கும்பலால் எர்ணாகுளத்தில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக அனுப்பப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சமீம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கடத்தலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.