காலி பாட்டில் திரும்பப் பெறுவதில் தகராறு - கிருஷ்ணகிரியில் இளைஞர் அடித்துக் கொலை!
கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் காலி மதுபான பாட்டிலை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த அருண்குமார் (33) என்ற இளைஞருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே காலி மதுபான பாட்டிலை மீண்டும் ஒப்படைப்பது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாகச் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் அருண்குமாரைக் கல்லைத் தூக்கிப் பலமாகத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இக்கொலைக்குக் காரணமான முக்கிய நபர்கள் இருவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.