தாய், மனைவியைக் கொன்று வாலிபர் தற்கொலை... காப்பாற்ற சென்ற மகனும், மகளும் சேர்ந்து உயிரிழந்த சோகம் - ஆன்லைன் ரம்மியால் விபரீதம்!
ஆந்திர மாநிலம் திருப்பதியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின் போதையால் ஏற்பட்ட கடன் சுமை, ஒரு ஒட்டுமொத்தக் குடும்பத்தையே அழித்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த சில காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதில் அவர் சுமார் பல லட்ச ரூபாயைத் தோற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
முதலில் தனது தாய் சந்திரகலா (65) மற்றும் மனைவி ஹரிதா (33) ஆகிய இருவரையும் வீட்டில் வைத்து மோகன் கொலை செய்துள்ளார். பின்னர், தனது இரண்டு குழந்தைகளான கௌஷிக் (14) மற்றும் ஹரினி (12) ஆகியோரை அழைத்துக் கொண்டு திருப்பதி அருகேயுள்ள ரயில் தண்டவாளத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மோகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்ய முயன்ற தந்தையைக் குழந்தைகள் இருவரும் காப்பாற்ற முயன்ற போது, எதிர்பாராத விதமாக மகனும் மகளும் அதே ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஐந்து பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்வது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளால் கடன் சுமை ஏற்பட்டால் அல்லது மன அழுத்தம் இருந்தால், தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டு உதவிக்கு அணுகவும்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050 / 044-24640060