தீண்டாமைச் சுவரை இடிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் இளைஞர் முட்டிப்போட்டு போராட்டம் - சென்னையில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலின மக்களின் வழிபாதையை முடக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை இடிக்க வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் நபர் ஒருவர் திடீரென முட்டிபோட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 அடி உயரத்தில் பெருஞ்சுவர் ஒன்று கட்டப்பட்டது. இந்தச் சுவரால் அப்பகுதியில் வசிக்கும் 350-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் பொதுப் பாதை, பள்ளி மற்றும் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்த முடியாமல் கடந்த 16 ஆண்டுகளாகப் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுவரை அகற்றுவது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் விரக்தியடைந்த வ.புதுப்பட்டியைச் சேர்ந்த நபர், நீதி கேட்டு நேரடியாகச் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்குத் "தீண்டாமைச் சுவரை உடனடியாக இடி!" என முழக்கமிட்டபடி முட்டிபோட்டு நகர்ந்து சென்று தனிநபராகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பலத்த பாதுகாப்பு கொண்ட தலைமைச் செயலகத்தில் நடந்த இச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாகக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். பின்னர், இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்குமாறு அவரை அறிவுறுத்தினர்.