2027 ஐபிஎல் சீசனில் பேட்டிங் பயிற்சியாளராகக் களமிறங்கும் யுவராஜ் சிங்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், வரவிருக்கும் 2027 ஐபிஎல்சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகநியமிக்கப்பட உள்ளதாகத் நம்பத்தகுந்த ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரு சீசன்களாகத் டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்ததைத் தொடர்ந்து, அணியின் ஒட்டுமொத்தப் பயிற்சிப் பணியாளர்களையும் மாற்றியமைக்க நிர்வாகம் இந்த  முடிவை எடுத்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கூட்டு உரிமையாளர்களான ஜிஎம்ஆர் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் தங்களுக்குள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகப் பொறுப்புகளை மாற்றி ஏற்றுக்கொள்கின்றன. அந்த வகையில், 2027 மற்றும் 2028 சீசன்களுக்கான நிர்வாகப் பொறுப்பை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் ஏற்கவுள்ளது.

இதன் காரணமாக, டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராகச் சௌரவ் கங்குலி மீண்டும் முழு அதிகாரத்துடன் பொறுப்பேற்கவுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கின் முதல் கேப்டனாக விளங்கிய கங்குலியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே, யுவராஜ் சிங் டெல்லி அணியின் டக்-அவுட்டிற்குள் கொண்டு வரப்படுகிறார். இதன் மூலம் இந்த வெற்றிக் கூட்டணி பல ஆண்டுகள் கழித்து ஐபிஎல் மூலம் மீண்டும் ஒன்று சேர்கிறது.

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யுவராஜ் சிங் எந்தவொரு அதிகாரப்பூர்வப் பயிற்சிப் பொறுப்பையும் இதுவரை ஏற்றதில்லை. ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக அவருக்கு இதுவே முதல் முறை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகப் பல இளம் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிறந்த வழிகாட்டியாகஇருந்து வருகிறார்.

தற்போதைய இந்திய அணியின் இளம் நட்சத்திரங்களான சுப்மன் கில் மற்றும் டி20 கிரிக்கெட்டின் முன்னணி பேட்டரான அபிஷேக் சர்மா ஆகியோர் யுவராஜ் சிங்கின் தீவிரக் கண்காணிப்பில் பயிற்சி பெற்று வளர்ந்தவர்கள்.

மேலும் ரிஷப் பண்ட், பிரப்சிம்ரன் சிங், அப்துல் சமத் போன்ற வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் சரிவைச் சந்தித்த போதெல்லாம் யுவராஜ் சிங் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிப் பக்கபலமாக இருந்துள்ளார்.

நெட்களில் களத்தில் இறங்கி, மணிக்கணக்கில் நின்று வீரர்களுடன் நேரடியாகப் பயிற்சி அளிக்கும் யுவராஜ் சிங்கின் அணுகுமுறை, டெல்லி அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமங் பதானி, முனாஃப் படேல் மற்றும் வேணுகோபால் ராவ் ஆகிய தற்போதைய பயிற்சியாளர்களுக்குப் பதிலாகப் புதிய பயிற்சியாளர்கள் குழுவை உருவாக்கத் டெல்லி நிர்வாகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.