வர்ற தேர்தல்ல திமுகவுக்குப் பூஜ்ஜியம்; அதிமுகவுக்கு ராஜ்ஜியம்” - வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி முழக்கம்!
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க-வின் தேர்தல் யுக்திகள் மற்றும் நிதி உதவித் திட்டங்களை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். "தி.மு.க என்பது எப்போதும் கூட்டணியை மட்டுமே நம்பித் தேர்தலைச் சந்திக்கும் கட்சி. ஆனால், அ.தி.மு.க என்பது வலுவான கூட்டணியுடன் மக்களையும் நம்பித் தேர்தலைச் சந்திக்கிறது. அ.தி.மு.க நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்தது; ஆனால் தி.மு.க தற்போது வீட்டு மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது" என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த ரூ.5000 உதவித்தொகைத் திட்டம் குறித்துப் பேசிய அவர், "தேர்தல் பயம் வந்துவிட்டதால் மூன்று மாத உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால உதவித்தொகை எனச் சேர்த்து ரூ.5000 வழங்குகிறார்கள். இது ஒன்றும் சூப்பர் ஹிட் அல்ல. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 உதவித்தொகையாகக் கொடுப்போம் என நாங்கள் அறிவித்ததுதான் உண்மையான சூப்பர் ஹிட். இதைச் செரிக்க முடியாமல் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்."
திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுவிட்டதாகவும், விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் தி.மு.க கைதேர்ந்தது என்று குற்றம் சாட்டியவர், தமிழக காவல்துறை தி.மு.க-வின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும், சிறுவர்களைப் போதைக்கு அடிமையாக்கும் அளவுக்குக் குற்றவாளிகள் துணிச்சலுடன் உலா வருவதாகவும் ஆதங்கப்பட்டார்.
"மக்களிடம் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று கேட்டால், தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கனவாக இருக்கிறது" என்று அவர் பேசினார். "எதிர்வரும் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பூஜ்ஜியம் தான் கிடைக்கும். அ.தி.மு.க கூட்டணிக்குப் பெரிய ராஜ்ஜியம் கிடைக்கும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை வென்று அ.தி.மு.க ஆட்சி அமைப்பதைத் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார்" என்று சவால் விடுத்தார். தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.