விலங்கியல் பூங்காவில் அரிய நிகழ்வு: ஒரே நேரத்தில் பிறந்த 5 பறவை குஞ்சுகளால் உலக சாதனை!
பிரிட்டனில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில், உலகிலேயே மிக அரிய வகையான ஆப்பிரிக்க செக்ரட்டரி பேர்ட் இனத்தைச் சேர்ந்த 5 பறவை குஞ்சுகள் ஒரே நேரத்தில் பொரித்து உலக சாதனை படைத்துள்ளன. இந்த பூங்காவின் 95 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 மாதங்களில் ஐரோப்பாவின் பல்வேறு மையங்களில் வெறும் 3 குஞ்சுகள் மட்டுமே பொரிந்த நிலையில், இந்த பூங்காவில் மட்டும் ஒரே நேரத்தில் 5 குஞ்சுகள் வெற்றிகரமாகப் பொரிந்துள்ளன.
சர்வதேச பறவைகள் இனப்பெருக்க பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் ஜான் மற்றும் ஜோலின் என்ற ஜோடி பறவைகளுக்கே இந்த 5 குஞ்சுகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த பறவைகள், காற்றில் பறந்து வேட்டையாடுவதை விட, தங்கள் நீண்ட கால்களால் தரையில் உள்ள விஷ பாம்புகளை மிதித்துக் கொல்லும் திறன் கொண்டவை. வனப்பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இவற்றை அழிந்து வரும் இனம் என அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரே பூங்காவில் 5 குஞ்சுகள் பிறந்துள்ள செய்தி உலக அளவில் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்த சாதனை மிகப்பெரிய வெற்றியாகவும் ஊக்கமாகவும் அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்கியல் பூங்காவில் பிறந்துள்ள இந்த அழகிய குஞ்சுகளைக் காணப் பலரும் ஆர்வம் காட்டி வருவதுடன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.