பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ உமா சங்கர் சிங் காலமானார்!

 

 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக இருந்த உமா சங்கர் சிங் (55) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ரா தொகுதியிலிருந்து 2012-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நீண்டகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு, 403 தொகுதிகளைக் கொண்ட தற்போதைய சட்டப்பேரவையில் உமா சங்கர் சிங் மட்டுமே ஒரே பிரதிநிதியாக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத சூழல் உருவாகியுள்ளது.