இனி தாராளமாக கடன் கிடைப்பதில் சிக்கல்... தங்க நகைக் கடன்களுக்கு ஆர்.பி.ஐ. அதிரடி கட்டுப்பாடு!
நகைக்கடன்கள் மூலம் உடனடிப் பணத்தேவையைப் பூர்த்தி செய்து வந்த சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், புதிய கடன் வரம்புகள் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, இனி அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் முழு மதிப்பிற்கும் கடன் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் அவசரத் தேவைக்காக நகைக்கடன் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
புதிய விதிமுறைகளின்படி, 2,50,000 ரூபாய் வரை கடன் பெறுவோருக்குத் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே பணம் வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் 2,50,000 முதல் 5,00,000 ரூபாய் வரை கடன் கோரினால், அது 80 சதவீதமாகக் குறைக்கப்படும். குறிப்பாக 5,00,000 ரூபாய்க்கு மேல் அதிகத் தொகை கடன் கேட்பவர்களுக்கு 75 சதவீதம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சந்திக்கும் இடர்களைக் குறைக்கவே இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிக தொகை கடன்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெரிய அளவில் தொழில் செய்வோர் மற்றும் அவசரப் பணத்தேவை உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த புதிய நடைமுறை நகைக்கடன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.