தாய் மாமன் தங்க மோதிர திட்டம்: தமிழக அரசுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த 'ஜாய் ஆலுக்காஸ்'!
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துச் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படவுள்ளதுடன், கடந்த ஜூன் 22-க்குப் பின் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இதன் மூலம் பயன்பெறுவர்.
முதற்கட்டமாக 4,41,667 தங்க மோதிரங்களை வாங்குவதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது. இதில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், பேக்கிங் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேவைக் கட்டணமாக '1 பைசா' மட்டுமே கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்கள் தயாரிக்கும் பணியில், 70 சதவீதப் பணிகள் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், 30 சதவீதப் பணிகள் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்கம் வழங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகச் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.