"வீட்டை விட்டு துரத்தப்பட்டேன்; இது என் அம்மாவின் கனவு" - தங்கம் வென்ற ஷர்மிளா உருக்கம்!

 

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் அபார திறமையை வெளிப்படுத்தி, ஒரே நாளில் 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றிப் பெருமை சேர்த்துள்ளனர்.

பெண்களுக்கான குண்டு எறிதல் இறுதிப்போட்டியில், 40 வயதான இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் பாரா தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார்.

தங்கம் வென்ற பிறகு பேசிய ஷர்மிளா தன்கர் தனது கடினமான வாழ்க்கைப் பாதையைப் பகிர்ந்து கொண்டார்: 2 வயதில் போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்ட ஷர்மிளாவின் அம்மா பார்வையற்றவர், தந்தை ஒரு விவசாயி. 19 வயதில் முதல் திருமணம் முடிந்து இரு மகள்கள் உள்ள நிலையில், கணவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். அதன் பின்னர் 2-வதாக அஜித் சிங் என்பவரை மணந்தார்.

2-வது கணவரின் ஊக்கத்தால் பாரா விளையாட்டிற்குள் நுழைந்த ஷர்மிளா, 2021-ல் தேசிய சாதனையை முறியடித்துத் தனது பயணத்தைத் தொடங்கினார். "நாட்டிற்காகப் பதக்கம் வென்றதில் பெருமையடைகிறேன். இது என் அம்மாவின் கனவு. இந்தத் தங்கப் பதக்கத்தை என் தாய்க்குச் சமர்ப்பிக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.