மதிமுக செயலாளராக துரை வைகோ நியமனம்!வாரிசு அரசியலுக்கு வழிவகுத்த வைகோ!

 

மதிமுகவின் செயலாளராக தனது மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இன்று உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவில் தன்னுடைய மகனை கட்சியில் இணைத்து பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைகோ முடிவு எடுத்துள்ளதாகவும் இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ரகசிய வாக்கெடுப்பில் 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவுக்கு ஆதரவாக கிடைத்துள்ளன. இதனையடுத்து, மதிமுக கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக பொறுப்பு ஏற்ற பின்னர் இம்மாதம் 25ம் தேதி பெரியார், அண்ணா நினைவிடத்தில் துரை.வைகோ மரியாதை செலுத்த உள்ளார். அதன்பின்னர்,முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களில், திமுகவில் வாரிசு அரசியலைக் காரணம் காட்டி, அதனை எதிர்த்து தானே தனிக்கட்சி ஆரம்பிச்சாரு. இவருக்கு ஆதரவா தீக்குளிச்சு இறந்தவங்க குடும்பத்தையும், தொண்டர்களின் தியாகத்தையும் எல்லாம் மறந்துட்டு, இப்படி இவரே இந்த கட்சியிலும் வாரிசு அரசியலுக்கு வழி வகுக்கலாமா? என்று ட்ரெண்டாக்கி வருகின்றனர்.