விஜய் மல்லைய்யாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

 

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. எனவே, அவர் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை அவரது பிள்ளைகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். இது தொடர்பில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் இங்கிலாந்தில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்றும், அந்த நடவடிக்கைகள் ரகசியமானவை என்பதால் அவை குறித்து அறிய முடியவில்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பாகியுள்ள நிலையில் தண்டனை விவரங்களை அறிவிக்கும் பொருட்டு, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை நீதிமன்றம் காத்திருக்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா விரும்பினால் ஆஜராகலாம் அல்லது அவரது வக்கீல் வாயிலாக வாதங்களை முன்னெடுக்கலாம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான விசாரணை வருகிற ஜனவரி 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தாவை நியமிக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.