‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசு!

 

இந்தியாவில் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறிக்கொள்ள பெரும்பான்மையானவர்களின் ஒரே தேர்வாக இருப்பது வாட்ஸ் அப் செயலி மட்டுமே. இந்த செயலியின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு பிப்ரவரியில் இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கு சமூக ஊடகங்கள் ஒப்புதல் அளிக்க மே 25வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால் வாட்ஸ்-அப் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் மத்திய அரசின் சட்டவிதிகள், தனி உரிமையை பாதிக்கும் எனத் தெரிவித்ததுடன் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடைநிலை வழிகாட்டுதல்களுக்கு எதிராக வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு தொடுத்திருப்பது விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதைத் தடுப்பதற்கான முயற்சியே.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் சட்டரீதியான குறுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் என சட்டமே இயற்றியுள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா எவ்வளவோ குறைவாகத் தான் கேட்டுள்ளது.

இந்தியாவின் இடைநிலை வழிகாட்டுதல்கள், தனி உரிமைக்கு மாறானவை என்று சித்தரிக்கும் வாட்ஸ்-அப்பின் முயற்சி மிகத்தவறானது.

தனி உரிமையை அரசு அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொண்டாலும் குடிமக்களுக்கு உறுதிப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் சட்டம், ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் இணக்கமான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு இவற்றுக்கு எதிரான வகையில் பகிரப்படும் தகவல்களை அவசியமானால் வாட்ஸ் நிறுவனம் பாரபட்சமின்றி வெளியிடவேண்டும்.