மனம் திறந்த முதல்வர்! ராஜினாமா செய்ததற்கான காரணம் இது தான்!?

 

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. இவர் தொடர்ந்து 4 வது முறையாக 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பதவியேற்றார். பாஜக கட்சியின் கொள்கை விதிப்படி 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு 76 வயதான எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அப்போதே நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்த பிறகு விடுத்த செய்திக்குறிப்பில் “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்தபடி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன்.

என் மீது மதிப்பு வைத்து கர்நாடகா முதல்வராக மக்களுக்கு சேவை செய்ய 2 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்த பிரதமர் மோடி, நட்டா மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி. அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.