கலெக்டர் பத்மஜா நீதிமன்றத்தில் 2.15 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்... சற்று நேரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது?!
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான ஆபாசக் குறுஞ்செய்தி மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்வாதி அழகப்பன் முன்பு நேரில் ஆஜராகி சுமார் 2 மணி 15 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அவர் சற்று நேரத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்வாதி அழகப்பன் முன்பு நேரில் ஆஜராகித் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். நீதிபதி அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு, முழுமையான ரகசியத் தன்மையுடன் சுமார் 2.15 மணி நேரம் ஆட்சியரின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164-ன் கீழ் (BNS / BNSS தொடர்புடைய ரகசிய வாக்குமூலப் பிரிவு), பாதிக்கப்பட்டவர் நேரடியாக நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கும்போது வழக்கின் உறுதித்தன்மை பன்மடங்கு அதிகரிக்கிறது. இதன் மூலம் நீதிபதியும் ஒரு சாட்சியாக மாறுவதோடு, எதிர்காலத்தில் இந்த வாக்குமூலத்தைத் திருத்தவோ மாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியரின் இந்தப் பரபரப்பு வாக்குமூலத்தைப் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் இல்லத்திற்கு வெளியே தற்போது கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.