தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்!பொதுமக்கள் அவதி!

 

இந்தியாவில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஏப்ரல் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி இதுவரை போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் 6வது நாளாக நீடித்து வருகிறது.

சில ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பிய நிலையில் அவர்களை கொண்டு 3,000 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் டிரைவர்கள் மூலம் அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. உரிய பயிற்சி இல்லாதவர்கள் மூலம் பஸ்களை இயக்குவதால் விபத்துகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்தாலும் அதிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இப்போதைக்கு முடிவடைவதாக தெரியவில்லை.

சம்பள உயர்வு வழங்காமல் வேலை நிறுத்தத்தை கைவிடப்போவது இல்லை என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசும், போக்குவரத்து ஊழியர்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் சாமானிய மக்கள் பஸ் போக்குவரத்து இல்லாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பணிக்கு ஆஜரான ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்னும் மார்ச் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே பணிக்கு ஆஜராகாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamaalai.com