MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடிதம்!

 

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நிர்வாகச் சூழலில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு நீதி கிடைக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கை தேவை எனச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட உள் புகார் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதற்கிடையில், இந்த விவகாரம் மற்றும் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்துத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப் புகார் மனு அளிக்க உள்ளார்.