உலகளாவிய ஒப்பந்தம் மூலம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி! ஸ்டாலின்!

 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் மே 1முதல் தடுப்பூசி வழங்க தயாராக இருந்தன. ஆனால் மத்திய அரசு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கவில்லை.
2வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது தமிழக அரசும் அதே முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 13 லட்சம் டோஸ்கள் போதுமானதல்ல. ஆகவே தமிழக அரசு உலகளாவிய ஒப்பந்தத்தை கோரலாம் என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் இறக்குமதி செய்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.