கொரோனா தொற்றின் ஒருநாள் பதிப்பில் உலக அளவில் முதலிடம் பிடித்த இந்தியா

 

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அசுர வேகமெடுத்து தீவிரமாக பரவி வருகிறது. இது கொரோனாவின் 2 வது அலையாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடித்துவந்தது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,01,785ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 630 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,17,92,135 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 59,856 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 8,70,77,474 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.