கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.7 கோடி !சோனி நிறுவனம் !

 

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. இதனையடுத்து ஆக்சிஜன் டெம்டெசிவிர், தடுப்பூசிகள் தட்டுப்பாடு பிரச்னைகள் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றன.

கூகுள் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் ஆகியவை நிவாரணம் வழங்கியுள்ளன. இந்நிலையில் சோனி நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு நிதி வழங்கியுள்ளது. அதன்படி, சோனி குழுமம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 7 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளது.

அவர்கள் கொடுக்கும் நிதி ஐநா சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் மூலம் இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள், கொரோனா பரிசோதனை இவற்றிற்கு பயன்படுத்தப்படும்.

சோனி உலக நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. சோனி நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்தது. அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், சோனி இந்தியாவுக்கு உதவ முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது