பொங்கல் தொகுப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

 

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்க கூடுதலாக ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான தொகையாக ரூ. 1,088 கோடியை ஏற்கனவே ஒதுக்கி அரசு ஆணையும் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த பரிசுத் தொகுப்புடன் பயனாளிகள் அனைவருக்கும் கூடுதலாக கரும்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கரும்பு ஒன்றுக்கு ரூ. 33 வீதம் அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் ரூ. 71.10 கோடியை கூடுதலாக ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்டு உள்ளார்.