சிக்கிம் முதலவர் பிரேம் சிங் தாயார் காலமானார்; அரசியல் தலைவர்கள் இரங்கல்!
சிக்கிம் மாநில முதலமைச்சரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவருமான பிரேம் சிங் தமாங்கின் (பி.எஸ். கோலே) தாயார் தன்மயா தமாங் (87) உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
சிக்கிம் மாநிலம் சோரெங் மாவட்டத்தில் உள்ள சிங்லிங் பகுதியைச் சேர்ந்த தன்மயா தமாங், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 7 முதல் 8 மாதங்களாகச் சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
காலமான தன்மயா தமாங்கின் கணவர் காலு சிங் தமாங் ஏற்கெனவே கடந்த 2022-ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்கின் தாயார் மறைவுக்கு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடையவும், துயரத்தில் வாடும் முதலமைச்சர் குடும்பத்தினருக்கு மன வலிமை கிடைக்கவும் தலைவர்கள் பிரார்த்தனை தெரிவித்துள்ளனர்.